கர்நாடகாவில் ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
ஏரியில் குளிக்க சென்ற சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு,
கர்நாடகாவில் உள்ள திம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஜீவன் (13), சாத்விக் (11), விஷ்வா (12), பிருத்வி (12) ஆகிய 4 சிறுவர்கள் குளிப்பதற்காக ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கு குளித்து கொண்டிருக்கும்போது ஒரு சிறுவனின் கால் சேற்றில் சிக்கியது. அப்போது அந்த சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் ஒருவர் பின் ஒருவராக சென்ற மேலும் 3 சிறுவர்களும் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து சிறுவர்கள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர்கள் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் ஏரியில் குளிக்க சென்றது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் உயிரிழந்த 4 சிறுவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற 4 சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.