அசாமில் 3-வது சம்பவம்; விதிமீறி கட்டப்பட்ட மதரசாவை இடித்து தள்ளிய நிர்வாகம்
அசாமில் விதிகளை மீறி கட்டப்பட்ட மதரசா, மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் இன்று இடித்து தள்ளப்பட்டது.
கவுகாத்தி,
அசாமில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன என கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், வங்காளதேச பயங்கரவாத குழுவான அன்சாருல் இஸ்லாத்துடன் தொடர்புள்ள 40-க்கும் மேற்பட்டோரை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், கடந்த ஜூலை 28-ந்தேதி 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு வங்காளதேச நாட்டை அடிப்படையாக கொண்டு இயங்க கூடிய பயங்கரவாத அமைப்பான அன்சாருல்லா வங்காள குழு (ஏ.பி.டி.) மற்றும் அல்-கொய்தாவின் இந்திய துணை கண்டம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர்களில் முஸ்தபா என்பவர் நடத்தி வரும் மதரசாவானது, சட்டவிரோத செயல்களை நடத்துவதற்காக நிதியுதவி அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, அந்த மதரசாவுக்கு போலீசார் சீல் வைத்தனர். இதன்பின்பு, சட்ட விதிகளின்படி கட்டிடம் இடிக்கப்பட்டது.
இதுதவிர, ஆயுத தளவாடங்கள் மற்றும் பயங்கரவாத உறுப்பினர்களுக்கு புகலிடம் வழங்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதன் பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அல்-கொய்தாவின் இந்திய துணை கண்டம் பயங்கரவாத அமைப்புடன் மற்றும் அன்சாருல்லா வங்காள குழு (ஏ.பி.டி.) ஆகியவற்றுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய 2 பயங்கரவாதிகள், கோல்பாரா மாவட்டத்தில் வைத்து அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்களை தொடர்ந்து, அசாமில் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதுபற்றி, செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வ சர்மா, நாங்கள் சில வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி இருக்கிறோம்.
இதன்படி, கிராமத்திற்கு புதிதாக வரும் இமாம்கள் உள்ளூர் மக்களுக்கு தெரியாத நபராக இருப்பின், உடனடியாக காவல் நிலையத்திற்கு அதுபற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும். போலீசார் விசாரித்த பின்னரே, அவர்கள் தங்க முடியும். இதற்கு அசாமிலுள்ள முஸ்லிம் சமூக மக்கள் உதவியாக இருக்கின்றனர் என கூறியுள்ளார்.
இமாம்களுக்காக வலைதளம் ஒன்றையும் நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதன்படி, வெளி மாநிலத்தில் இருந்து அசாமுக்கு வரும் இமாம்கள் தங்களது பெயர்களை அதற்கான வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அசாமில் உள்ள இமாம்கள் அதில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டியதில்லை என முதல்-மந்திரி கூறியுள்ளார்.
இந்நிலையில், அல்-கொய்தாவின் இந்திய துணை கண்டம் பயங்கரவாத அமைப்பு மற்றும் அன்சாருல்லா வங்காள குழு (ஏ.பி.டி.) ஆகியவற்றுடன் தொடர்புடைய இமாம் மற்றும் மதரசா ஆசிரியர்கள் என 37 பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக போங்கைகாவன் மாவட்டத்தில் உள்ள கபைதரி பாகம்-4 கிராமத்தில் அமைந்துள்ள மர்காஜுல் மா-ஆரிப் குவாரியானா மதரசா இன்று இடித்து தள்ளப்பட்டது. அசாமில் இடிக்கப்பட்ட 3-வது மதரசா இதுவாகும். இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு கூறும்போது, மாவட்ட நிர்வாகம் பிறப்பித்து உள்ள உத்தரவில், மதரசாவின் கட்டமைப்பு பலவீனம் அடைந்து உள்ளது.
இதுதவிர, மனிதர்கள் வசிப்பதற்கு பாதுகாப்பற்றது என தெரிவித்து உள்ளது. இந்த மதரசா கட்டிடங்கள் விதிகளின் கீழ் கட்டப்படவில்லை என தெரிவித்து உள்ளார்.
கோல்பாரா மாவட்ட போலீசார், மேற்குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்காக கைது செய்யப்பட்ட நபருடன் இந்த மதரசாவுக்கு வந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட உத்தரவின்படி, நாங்கள் மதரசாவை இடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம் என கூறியுள்ளார்.