நாடு முழுவதும் ஆயுஸ்மான் திட்டத்தில் 39 லட்சம் பேர் பயன்; பிரதமர் மோடி பெருமிதம்
நாடு முழுவதும் ஆயுஸ்மான் திட்டத்தில் 39 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மைசூரு:
பிரதமர் மோடி வருகை
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்திற்கு நேற்று வந்தார். பெங்களூருவுக்கு வந்த அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு மாலையில் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் மைசூருவுக்கு வந்தார். அவரை, பா.ஜனதா தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதையடுத்து அவர், மகாராஜா கல்லூரிக்கு சென்று விவசாயிகள் மற்றும் மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இதையடுத்து விழா மேடைக்கு சென்று பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்திய குடிமகன்கள்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களில் மிகவும் முக்கியமானது ஆயுஸ்மான் பாரத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 39 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். ஒரே நாடு, ஒரே ேரஷன் கார்டு திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முழுமையாகும் போது இந்திய குடிமகன்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமென்றாலும் குடும்ப அட்டைகளை காண்பித்து ரேஷன் பொருட்களையும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று கொள்ள முடியும்.
இதேபோல் வீடுதோறும் குடிநீர் குழாய் பதித்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றி வருகிறோம். இதன் மூலம் தரைவழி போக்குவரத்து சுமுகமாகியுள்ளது. மைசூரு அருகே நாகனஹள்ளி ெரயில்வே முனையம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
காதுகேளாதோர் மையம்...
மைசூருவில் உருவாக்கப்பட்டுள்ள அகில இந்திய காதுகேளாதோர் மையம் நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மத்திய அரசின் பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.
ஆனால் காங்கிரஸ் இரட்டை என்ஜின் அரசு என்று கேலி செய்து வருகிறது. இரட்டை என்ஜின் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக 2014-ம் ஆண்டு ஆட்சி வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரூ.7 ஆயிரம் கோடி லாபம்
இதற்கு முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிதான் மக்களுக்கு எந்த நலதிட்டங்களையும் செய்யவில்லை.
மேலும் ரெயில்வே துறையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு ரூ.200 கோடி மட்டும் லாபம் கிடைத்தது. ஆனால் பா.ஜனதா ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி வரை மத்திய அரசுக்கு லாபம் கிடைக்கிறது. இனி வரும் நாட்களிலும் மத்திய அரசு சிறப்பாக செயல்படும். மேலும் பல புதிய திட்டங்களை கொண்டு நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் என்று உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாமுண்டீஸ்வரி கோவிலில் தரிசனம்
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு கார் மூலம் சாமுண்டீஸ்வரி மலை அடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சாமியை சந்தித்து ஆசிபெற்றார். இதையடுத்து அவர் அங்கிருந்து சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து சாமிதரிசனம் செய்தார். பின்னர் கணபதி பூஜையிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இதை தொடர்ந்து அவர் கார் மூலம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று இரவு தங்கினார். மோடியின் வருகையையொட்டி நேற்று மைசூரு நகரமே விழா கோலம் பூண்டிருந்தது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை 6.30 மணிக்கு மைசூரு அரண்மனை மைதானத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.