பெங்களூருவில் 300 மின்சார பஸ்கள் 14 வழித்தடங்களில் இயக்கம்; பி.எம்.டி.சி. அறிவிப்பு

பெங்களூருவில் இருந்து 300 மின்சாரம் பஸ்கள் 14 வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக, பெங்களூரு போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-20 17:05 GMT

பெங்களூரு: பெங்களூருவில் இருந்து 300 மின்சாரம் பஸ்கள் 14 வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக, பெங்களூரு போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 மின்சார பஸ்கள்

பெங்களூரு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , பெங்களூருவில் இருந்து பிடதி, எலகங்கா மற்றும் அத்திபெலே போன்ற வழித்தடங்களில் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த மின்சார பஸ்கள் தற்போது தனியார் உற்பத்தியாளர்களிடம் இருந்து 12 பஸ்கள் வாங்கியுள்ளதாகவும் வருகிற ஆகஸ்டு முதல் வாரத்தில் மேலும் 100 பஸ்கள் வாங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வரும் அக்டோபர் மாதத்திற்குள் மீதமுள்ள 300 பஸ்கள் வாங்கி இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வகை பஸ்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களாக இயக்கப்பட உள்ளது.

மேலும் இந்த 300 மின்சார பஸ்களும் 41 இருக்கைகள் கொண்டதாகவும், இந்த பஸ்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை இயக்கலாம். எனவே தான் இந்த பஸ்களை நீண்ட தூர வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடைவேளை கிடைக்கும் நேரங்களில் சார்ஜ் செய்தால் மேலும் 75 கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் ஒரு நாளைக்கு 225 கிலோ மீட்டர் தூரம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

14 வழித்தடங்களில்...

அந்த மின்சார பஸ்கள் அனைத்தும் அக்டோபர் மாதத்தில் முழுமையாக இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பஸ்கள் 14 வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது. அந்த வழித்தடங்கள்: (226 எம்) கே.ஆர் மார்க்கெட்-பிடதி, (226 என்) கெம்பேகவுடா பஸ்நிலையம் (கே.பி.எஸ்)-பிடதி, (276) கே.பி.எஸ்-வித்யராண்யபுரா, (290 இ) சிவாஜிநகர்-எலகங்கா, (328 எச்) அத்திபெலே-ஹோஸ்கோட், (கே.பி.எஸ். 3ஏ) கே.பி.எஸ்- அத்திபெலே, (360 கே) கே.பி.எஸ்- அத்திபெலே, (401 கே) எலகங்கா- கெங்கேரி, (402பி/402டி) கே.பி.எஸ்-எலகங்கா சேட்டிலைட் டவுன், (401 எம்) யஷ்வந்த்பூர்-கெங்கேரி, (500 டி) ஹெப்பால்-சென்ட்ரல் சில்க் போர்டு, (500 டி.எச்) அத்திபெலே-ஹெப்பால், (501 சி) ஹெப்பால்-கெங்கேரி மற்றும் (600 எப்) பனசங்கரி- அத்திபெலே ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார பஸ்கள் எலகங்கா, பிடதி மற்றும் அத்திபெலே ஆகிய 3 பணிமனைகளில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படும் என கூறியுள்ளனர். இதில் முதலில் இந்த பஸ்கள் எலகங்கா பணிமனையில் இருந்து மட்டும் இயக்கப்படும், சில நாள்களுக்கு பின்னர் மீதமுள்ள பணிமனைகளில் இருந்து இயக்கப்படும். மேலும் இந்த பஸ்களில் சிறப்பு அம்சமாக மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்காக சக்கர நாற்காலி தூக்கும் வசதிகளும் உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்