தறிகெட்டு ஓடிய கார், லாரி மீது மோதல்; 3 மாத குழந்தை, தாய் உள்பட 3 பேர் பலி
சித்ரதுர்கா அருகே தறிகெட்டு ஓடிய கார், லாரி மீது மோதிய பயங்கர விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 3 மாத குழந்தை, தாய் உள்பட 3 பேர் பலியானார்கள்.
சித்ரதுர்கா:
கார்-லாரி மோதல்
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் விஜயாப்புரா அருகே கொல்லரஹட்டி பகுதியில் கோவாவில் இருந்து பெங்களூரு நோக்கி ஒரு கார் நேற்று காலை வந்தது. அந்த சமயத்தில் கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் பல்டி அடித்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி அதில் பயணம் செய்த ஒரு பெண், ஒரு ஆண் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 மாத குழந்தை உள்பட 5 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர்.
3 மாத குழந்தை உயிரிழந்தது
உடனே அப்பகுதி மக்கள் விரைந்து சென்று காரில் சிக்கி உயிருக்கு போராடிய 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்ைச பலன் அளிக்காமல் 3 மாத குழந்தை உயிரிழந்தது.
இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பரமசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பெங்களூருவை சேர்ந்தவர்கள்
அவர்கள், விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் தப்சூம் (வயது 28), அவரது 3 மாத குழந்தை பாத்திமா, உறவினர் ஜாகீர் அகமது (60) ஆகியோர் என்பதும், காயமடைந்தவர்கள் நயாஸ் (22), இம்ரான்கான் (32), தப்ரோஜ் அகமத் (27), ஷபா (26) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியை சேர்ந்த இவர்கள் கோவாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு பெங்களூருவுக்கு காரில் திரும்பிய போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பரமசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.