ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் 3 கும்கி யானைகள்

எச்.டி.கோட்டை தாலுகாவில் சிறுவனை கொன்ற ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் 3 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-09-06 22:19 GMT

மைசூரு:-

ஆட்கொல்லி புலி

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா கல்லஅட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண நாயர். இவரது 7 வயது மகன் சரண். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுவன் தனது தந்தையுடன் விவசாய தோட்டத்திற்கு சென்றான். அப்போது அந்த சிறுவனை, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி தாக்கி கொன்று உடலை பாதியளவு தின்றது. அந்த ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தசரா விழாவில் பங்கேற்க வந்த அர்ஜூனா யானை உள்பட 3 கும்கி யானைகளை புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுத்தி உள்ளனர்.

தேடுதல் வேட்டை

நேற்று காலையில் கும்கி யானைகளான அர்ஜூனா, பீமா, அஸ்வத்தம்மா ஆகிவற்றுடன் 80 வனத்துறை ஊழியர்கள் அந்த ஆட்கொல்லி புலியை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர். அவர்கள் வனப்பகுதியில் 3 குழுக்களாக பிரிந்து சென்று புலியை தேடினர். புலியின் கால் தடங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையை நடத்தினர். மேலும் கல்லஅட்டி கிராமத்தைச் சுற்றி 30 இடங்களில் இரும்பு கூண்டுகளையும் வனத்துறையினர் வைத்துள்ளனர். பொதுமக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது என்றும் வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

நேற்று இரவு நேரம் ஆனதால் தேடுதல் வேட்டையை அப்படியே முடித்துக்கொண்டு வனத்துறையினர் முகாமுக்கு திரும்பினர். மீண்டும் நாளை(இன்று) புலியை தேடும் பணி தொடரும் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்