2 வாரத்திற்கு பிறகு மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கி சூட்டில் 3 இளைஞர்கள் கொலை
மணிப்பூரில் இரண்டு வாரத்திற்கு பிறகு மீண்டும் வன்முறை ஏற்பட்டு உள்ளது. துப்பாக்கி சூட்டில் 3 இளைஞர்கள் பலியாகி உள்ளனர்.
இம்பால்
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு மணிப்பூரில் அமைதி திரும்பிக் கொண்டு இருந்தது.
இந்த நிலையில் 2 வாரத்திற்கு பிறகு அங்கு மீண்டும் வன்முறை வெடித்து உள்ளது. இன்று காலை உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் கிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அங்கு மூன்று இளைஞர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லிட்டான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்த கிராமத்தில் இன்று அதிகாலையில் இருந்து பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கின்றது.