ராய்ப்பூரில் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் வரும் 24ம் தேதி காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2023-02-19 17:19 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

சத்தீஸ்கரின் ராய்பூரில் காங்கிரசின் 85வது முழுக் கூட்டத்தொடர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது, இதில் கலந்துகொள்ள சுமார் 15,000 பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், "அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு எங்கள் கட்சிக்கு இருப்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்திருந்தோம். அவர்களும் கலந்து கொண்டார்கள்.

நாடாளுமன்றத்திலும், அதானி விவகாரத்தை எழுப்புவதில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முழு அமர்வு கூட்டம் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை சத்தீஸ்கரில் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த அமர்வில் தேசிய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் என சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கிறார்கள். காங்கிரஸ் செயற்குழுவுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். மூன்றாம் நாள் முடிவில் ராய்ப்பூரில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்