சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் கர்நாடகத்தில் பா.ஜனதாவின் 2-வது கட்ட ஜனசங்கல்ப யாத்திரை

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் பா.ஜனதாவின் 2-வது கட்ட ஜனசங்கல்ப யாத்திரையை இன்று(திங்கட்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்குகிறார்.

Update: 2022-11-06 18:45 GMT

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் பா.ஜனதாவின் 2-வது கட்ட ஜனசங்கல்ப யாத்திரையை இன்று(திங்கட்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்குகிறார்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஜனசங்கல்ப யாத்திரை

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப யாத்திரையை நாங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளோம். முதல்கட்ட யாத்திரையை முடித்துவிட்டோம். இந்த நிலையில் 2-வது கட்ட யாத்திரையை நாளை(இன்று) மீண்டும் தொடங்க இருக்கிறேன். உடுப்பி, கதக், ஹாவேரி, பெலகாவி மாவட்டங்களில் 3 நாட்கள் இந்த யாத்திரை நடக்கிறது.

இந்த யாத்திரை வருகிற டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்த முறை மும்பை கர்நாடகத்தில் யாத்திரையை நடத்துகிறோம். எங்களின் வெற்றிக்கு இந்த யாத்திரை பெரும் உதவியாக இருக்கும். பிரதமர் மோடி வருகிற 11-ந் தேதி பெங்களூரு வருகிறார். அவர் அன்றைய தினம் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

சென்னை-மைசூரு இடையேயான வந்தேபாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த அதிவேக ரெயில் சேவை தொடங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பெங்களூருவுக்கு வரும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் இந்த புதிய முனையம் நமக்கு அவசியம் தேவைப்படுகிறது.

ஆண்டுக்கு 25 லட்சம் பயணிகள் இந்த விமான நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். புதிய முனையம் செயல்பாட்டிக்கு வந்தால், நாட்டில் டெல்லிக்கு அடுத்தபடியாக பெங்களூரு விமான நிலையம் தான் பெரியதாக இருக்கும். இந்த புதிய முனையம் தொடங்கப்படுவதால் கர்நாடகம் பொருளாதார ரீதியாக மேலும் வளர்ச்சி பெறும். சுற்றுலா, தொழில், தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி-வளர்ச்சி துறைகள் அதிகளவில் பயன் பெறும்.

மகிழ்ச்சி அளிக்கிறது

அதன்பிறகு சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அவரது சிலைக்கு 'வளர்ச்சி சிலை' என்று பெயரிட்டுள்ளோம். நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் பிரதமர் மோடி இந்த சிலையை திறந்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி வழங்கினர். அதில் நடந்துள்ள முறைகேடுகளை மூடிமறைக்க அக்கட்சியினர் முயற்சி செய்கிறார்கள். அதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் சகோதரரின் மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து அவரிடம் தொலைபேசியில் பேசினேன். உரிய விசாரணை நடத்தும்படி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் கிடைக்கும் தகவல்கள் மூலம் சாவுக்கான காரணம் என்ன என்பது தெரியவரும். அதன்பிறகு விசாரணையை எந்த கோணத்தில் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படுகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்