கூலி வேலைக்காக அழைத்து வரப்பட்ட 26 குழந்தைகள் மீட்பு - 8 கடத்தல்காரர்கள் கைது

கூலி வேலை செய்வதற்காக ஐதராபாத் அழைத்து வரப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 26 குழந்தைகளை தெலுங்கானா போலீசார் மீட்கப்பட்டனர்.

Update: 2023-05-26 18:13 GMT

கோப்புப்படம்

செகந்திராபாத்,

கூலி வேலை செய்வதற்காக ஐதராபாத் அழைத்து வரப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 26 குழந்தைகளை தெலுங்கானா போலீசார் மீட்கப்பட்டனர். செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் 8 கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

விஜயவாடாவில் இருந்து செகந்திராபாத் செல்லும் ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூலி வேலை செய்வதற்காக 13 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், பெண்கள் பாதுகாப்புப் பிரிவின் மனித கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்களுடன் அரசு ரெயில்வே போலீஸ் (ஜிஆர்பி) மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) குழுக்களும் குழந்தைகளை மீட்க உதவியது. குழந்தைகளை கூலி வேலைக்கு அழைத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ரம்ஜான் மொல்லா (19), சேக் சைதுல் (27), பிந்து தாஸ் (30), சுசென் துடு (37), பிரியருல் சேக் (20), எஸ்கே ஜாகிர் அலி (30), அப்துல் அலமின் மொண்டல் (30), சுரோஜித் சாந்த்ரா (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மற்றும் ஐதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 374 (சட்டவிரோதமாக எந்தவொரு நபரையும் விருப்பத்திற்கு மாறாக வேலை செய்ய கட்டாயப்படுத்துதல்) கீழ் ஒரு வழக்கு செகந்திராபாத்தில் உள்ள ஜிஆர்பி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

குழந்தைகள் நலக் குழுவின் முன் மீட்கப்பட்ட குழந்தைகள், ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சிறுவர்களுக்கான அரசு இல்லத்தில் தங்குமிடம் வழங்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்