ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட்
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.
புதுடெல்லி,
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம்வர் ராய் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்திராணியின் 3-வது கணவருமான பீட்டர் முகர்ஜியும் கைதானார். பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை காதலித்ததால், ஷீனாபோராவை அவரது தாய் இந்திராணி கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்த கொலை வழக்கு மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்திராணி முகர்ஜிக்கு கீழ் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், இந்திராணி முகர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது.