அசாம் வெள்ளம்: 2 லட்சம் பேர் பாதிப்பு; 7 பேர் பலி
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 7 பேர் பலியாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், 2,02,385 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் பலியாகி உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கேட்சர், சரேடியோ, தாரங், தேமாஜி, திப்ருகர், நல்பாரி உள்பட 24 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 12 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் மேடான பகுதிகளிலிருந்து சரிந்த பாறைகள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் ரெயில் இணைப்பு பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், மீட்பு நடவடிக்கைகள் தாமதம் ஆகியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பேரிடர் மீட்புப் படையினருடன், காவல்துறை, வருவாய்த்துறையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.