இயற்கை எரிவாயு விலை உயர்வு: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
இயற்கை எரிவாயு விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
சமையல் எரிவாயுவை தொடர்ந்து இயற்கை எரிவாயுவின் விலையும் அதிகரித்து வருகிறது. அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்ஜி.) விலை நேற்றும் கிலோவுக்கு ரூ.2 அதிகரித்து உள்ளது. இதன் மூலம் டெல்லியில் ஒரு கிலோ சி.என்.ஜி. விலை ரூ.73.61 ஆகவும், நொய்டாவில் ரூ.76.17 ஆகவும், குருகிராமில் ரூ.81.94 ஆகவும் விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் தளத்தில், ‘எரிபொருள் கொள்ளையின் புதிய தவணை இன்று (நேற்று) மீண்டும் நடந்திருக்கிறது. சி.என்.ஜி. கிலோவுக்கு மேலும் ரூ.2 அதிகரித்து இருக்கிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 11 தவணையாக கிலோவுக்கு ரூ.16 அதிகரித்து இருக்கிறது. 8 வருட சாதனையை முறியடித்த பணவீக்கம், இனி மேலும் அழிவை ஏற்படுத்தும்’ என குற்றம் சாட்டியுள்ளார்.