தூக்கில் தொங்கிய பிரபல வங்காள டி.வி. நடிகை... போலீஸ் விசாரணை
பிரபல வங்காள டி.வி. நடிகை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரபல வங்காள மொழி டி.வி. நடிகையான பல்லபி டேய் (வயது 21), தெற்கு கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவருடன் அவரது ஆண் நண்பரும் தங்கியிருந்தார்.
இந்த வீட்டில் உள்ள படுக்கை அறையில் நேற்று பல்லபி டேய் திடீரென தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்த அவரது ஆண் நண்பர் அலறினார். பின்னர் குடியிருப்பில் உள்ளவர்களுடன் சேர்ந்து நடிகையை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் நடிகை பல்லபி டேயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை பல்லபி டேய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். பிரபல நடிகை தூக்கில் பிணமாக தொங்கியது மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.