தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து அவதூறு; நடிகையை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு!
அவரது பதிவில் 'நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள்', 'நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது' என கூறியிருந்தார்.
தானே,
மராத்திய நடிகையான கேதகி சித்தாலே இந்தி மற்றும் மராத்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தற்போது தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.
மராத்தி நடிகை கேதகி சிதாலே(29 வயது) வேறு ஒரு நபர் எழுதியது என கூறி, தன் முகநூலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் குறித்து அவதூறு கருத்தை பதிவு செய்தார்.
அவரது பதிவில் "நீங்கள் ஊழல்வாதி.. நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள். நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறது" என பதிவிட்டுருந்தார். இது பெரிதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகையின் முகநூல் பதிவுக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக தானே, புனே உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர்.
சரத்பவார் குறித்து அவதூறு பரப்பியதாக, தானே குற்றப்பிரிவு போலீசார் நடிகை கேடகி சிதாலேயை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.இந்நிலையில், அவர் இன்று சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதே போல, சரத்பவார் குறித்து அவதூறு பரப்பியதாக 23 வயதான மாணவர் நிகில் பாம்ரே என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த அவதூறு வழக்கை விசாரித்த நீதிபதி, மராத்தி நடிகை கேதகி சித்தாலேவை மே 18 வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் செல்லப்பட்டார்.