பாபர் மசூதியை இழந்தது போல ஞானவாபி மசூதியை இழக்க மாட்டோம்: அசாதுதீன் ஒவைசி

ஞானவாபி மசூதி வளாகத்தின் வீடியோ சர்வேயில் சர்ச்சை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன் என்று ஆவேசத்துடன் பேசினார்.

Update: 2022-05-14 14:00 GMT
லக்னோ, 

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வீடியோ சர்வேயில் சர்ச்சை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன் என்று ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். 

உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன்  கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது. 

இதையடுத்து  களஆய்வுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து கீழ் கோர்ட்டின் உத்தரவிற்கு தடை சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஆனால், ஞானவாபி மசூதி நிர்வாகத்தின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு அடுத்த வாரம் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் பேசியதாவது:-

 “முஸ்லிம்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பின்பற்ற அரசியலமைப்பு அனுமதிக்கிறது. வீட்டிலும் வெளியிலும் நாங்கள் தொடர்ந்து அதை பின்பற்றுவோம். ஞானவாபி மசூதி விவகாரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற எதிர்க்கட்சிகள் மவுனம் காப்பது ஏன்? முஸ்லீம்கள் அவர்களின் வாக்கு வங்கி அல்ல என்பதால் அவர்கள் எதுவும் பேசவில்லை.
நாங்கள் ஒரு பாபர் மசூதியை இழந்துவிட்டோம், ஆனால் இன்னொரு மசூதியை இழக்க மாட்டோம். இதை  நான் உங்களுக்கும், இந்த அரசாங்கத்துக்கும் சொல்லவே இங்கு வந்துள்ளேன். எங்கள் (பாபர்) மசூதியை அவர்கள் தந்திரமாகவும், நீதியைக் கொலை செய்தும் பறித்தனர். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் மற்றொரு மசூதியை பறிக்க முடியாது” என்று  ஆவேசத்துடன் பேசினார்.

மேலும் செய்திகள்