சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகும் காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு இல்லை- சஞ்சய் ராவத்
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகும் காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு இல்லை என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
பண்டிட்டு சுட்டுக்கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது. இதற்காக, உள்ளூர் இளைஞர்கள் முதல் வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் வரை காஷ்மீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் சதூரா பகுதியில் அரசு அலுவலராக இருந்த ராகுல் பட்(வயது 35) என்பவரை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் நேற்று சுட்டு கொன்று விட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர்கூறியதாவது:-
பாகிஸ்தானை குறைசொல்லக்கூடாது
காஷ்மீரில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. காஷ்மீர் பண்டிட்டுகளை பற்றி பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். காஷ்மீர் பண்டிட்டுகளை அங்கு மீண்டும் குடியமர்த்துவது பற்றி சிந்தித்து வருகின்றனர்.
ஆனால் தற்போது கூட அங்கு எஞ்சி இருப்பவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். உள்துறை மந்திரி இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு அரசு என்ன செய்தது என்று கேள்வி எழும்போதெல்லாம், பாகிஸ்தானை குறை சொல்லிக்கொண்டு இருக்க கூடாது.
கடுமையான நடவடிக்கை
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகும், காஷ்மீரில் பண்டிட்டுகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், நீங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமன் பஜனை பாடுவது, மசூதிகளில் ஒலிபெருக்கிகளை நீங்குவது போன்ற பிரச்சினைகளை கையில் எடுப்பதன் மூலம் காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் காஷ்மீரின் பிரச்சினை தீர்க்கப்படாது. அரசு பேசுவதை நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.