கேரளா: மர்மமான முறையில் மனைவி, 2 குழந்தைகள் உயிரிழப்பு - கணவன் கைது...!
கேரளாவில் மர்மமான முறையில் மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லம்,
கேரள மாநிலம் கொல்லம் நகரில் வசிப்பவர் ரமீஸ். ஆலப்புழா போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு நஜீலா (27) என்ற மனைவியும் திப்பு சுல்தான் (5) என்ற மகனும் ஒன்றரை வயதில் மலாலா என்ற மகளும் இருந்தனர்.
ரமீஸ் குடும்பத்துடன் ஆலப்புழா நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை ரமீஸ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மதியம் 12 மணியளவில் தனது மனைவிக்கு அவர் போன் செய்துள்ளார். எந்தவிதமான பதிலும் வராததால் மீண்டும் போன் செய்துள்ளார். அப்போதும் மனைவியிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
உடனடியாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களை அழைத்து விசாரணை செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் சென்று பார்த்த போது வீடு பூட்டி உள்ளதாகவும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்கள்.
உடனடியாக ரமீஸ் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்த போது கதவு உள்பக்கம் தாழ் போடப்பட்டு இருப்பது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த ரமீஸ் ஆலப்புழா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அவர்கள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, நஜீலா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் காணப்பட்டார். மேலும், ஒரு துணியை பயன்படுத்தி மகன் திப்பு சுல்தானின் கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பதும், மகளை பக்கெட்
தண்ணீரில் முக்கி கொலை செய்து இருப்பதும் தெரிய வந்தது. போலீசார் 3 பேரின் உடலையும் மீட்டு ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நஜீலாவின் சகோதரி நபாலாவிடம் விசாரித்ததில், ரமீஸ் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும்.
ரமீஸின் செல்போனுக்கு அந்த பெண்ணிடம் இருந்து தினமும் குறுஞ்செய்திகள் வந்ததை பார்த்து நஜீலா தட்டிக்கேட்டதில் இருந்து கணவன், மனைவிக்கு சண்டை ஏற்படும். இதனால் தனது அக்காவை ரமீஸ் அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் கூறினார்.மேலும், தனது சகோதரியின் மரணத்திற்கு ரமீஸ் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் ரமீஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.