நாட்டுக்கு சேவையாற்ற விருப்பம்; 10 வயது சிறுவன் 2,600 கி.மீ. சைக்கிள் பயணம்
நாட்டுப்பற்று மற்றும் தேச ஒற்றுமைக்கான செய்தியை பரப்ப 10 வயது சிறுவன் 2,600 கி.மீ. சைக்கிள் பயணம் செய்து வருவது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
வருங்கால தூண்களான இன்றைய மாணவர்களிடம் காணப்படும் நல்ல விசயங்களே அவர்களது வாழ்க்கைக்கான வளர்ச்சி மட்டுமின்றி, எதிர்கால சமூகத்திற்கான வளர்ச்சியாகவும் அமையும். அந்த வகையில், 10 வயது அராப் என்ற சிறுவன் நாட்டின் மீது உள்ள பற்று மற்றும் தேச ஒற்றுமையை சமூக மக்களிடம் பரப்பும் நோக்கோடு சீரிய முயற்சியை எடுத்துள்ளார்.
இதற்காக மணிப்பூரில் இருந்து டெல்லி வரையிலான 2,600 கி.மீ. தொலைவை சைக்கிளில் கடந்து செல்வது என முடிவு செய்து, அதற்கான பயணம் கடந்த ஏப்ரல் 14ந்தேதி தொடங்கியது.
ஏப்ரல் 26ந்தேதி மேற்கு வங்காளத்தின் அலிபூர்துவார் பகுதிக்கு சென்ற அராப், இன்று உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரை சென்றடைந்து உள்ளார்.
இதுவரை 1,700 கி.மீ. தொலைவை நிறைவு செய்துள்ள அராபுக்கு, தந்தை மற்றும் தாத்தா ஷாஜகான்பூரில் சிறந்த வரவேற்பு அளித்தனர். அராப், சிறுவர்கள் விளையாட்டில் சேர வேண்டும் என வலியுறுத்தியதுடன், வருங்காலத்தில் அதனால் நல்ல தடகள வீரர், வீராங்கனைகளை நாடு பெற முடியும் என கூறியுள்ளார்.
2ம் வகுப்பு படிக்கும்போதே, சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை கேட்டேன். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நாட்டுக்காக நேதாஜி போராடியது பற்றி அறிந்து ஊக்கம் பெற்றேன் என கூறியுள்ளார். வருங்காலத்தில் இந்திய ராணுவத்தில் சேர திட்டமிட்டுள்ள அராப், நாட்டுக்கு சேவையாற்ற விருப்பம் என தெரிவித்து உள்ளார்.