தேர்தலில் வெற்றி பெற மந்திர கோல் எதுவும் இல்லை; சோனியா காந்தி
தேர்தலில் வெற்றி பெற மந்திர கோல் எதுவும் இல்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சி கூட்டத்தில் இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,
சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் உள்பட அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வழிகளை பற்றி ஆலோசனை மேற்கொள்ள காங்கிரஸ் செயல் குழு இன்று கூடியது.
இதில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சோனியா காந்தி பேசும்போது, தன்னலமற்ற பணி, ஒழுக்கம் மற்றும் ஒத்து போகும் தன்மை, அரசியல் சவால்களுக்கு இடையே கட்சியின் உறுதி தன்மை மற்றும் நெகிழ்ந்து செல்லும் திறன் ஆகியவற்றை தெளிவுபடுத்தும் கூட்டு நோக்கம் ஆகியவை அவசியம் என கூறினார்.
அவர் தொடர்ந்து, சுய விமர்சனம் தேவை. ஆனால், அது தன்னம்பிக்கையை அழிக்கும் வகையில் இருந்து விட கூடாது என்றும் கூறியுள்ளார்.
வருகிற 13ந்தேதி முதல் 15ந்தேதி வரை உதய்பூரில் தேர்தல் வெற்றிக்கான ஆய்வு முகாம் ஒன்று நடைபெற உள்ளது. இதில், 400 காங்கிரஸ் தலைவர்கள் வரை பங்கேற்க உள்ளனர்.
இதுபற்றி சோனியா கூறும்போது, ஒற்றுமை, ஒன்றிணைதல், கட்சியை மீட்டெடுப்பதற்கான தீர்மானம் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியவையே உதய்பூரில் இருந்து வெளிவரும் பலத்த மற்றும் தெளிவான முக்கிய தகவலாக இருக்க வேண்டும். அதனை உறுதி செய்யும் வகையிலான உங்களுடைய முழு ஒத்துழைப்பும் வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.