ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு அனுமதி உள்துறை அமைச்சகம் வழங்கியது
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு பாதுகாப்பு அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் ஒன்றான ஜெட் ஏர்வேஸ், நரேஷ் கோயலை நிறுவனர் தலைவராக கொண்டு தொடங்கப்பட்டதாகும்.
விமான போக்குவரத்து தொழிலில் கடும் போட்டியால் சரிவைச் சந்தித்த ஜெட் ஏர்வேஸ், திவால் நிலையை எட்டியது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதியுடன் விமான சேவையையும் நிறுத்தியது.
தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புரமோட்டராக ஜலான்-கல்ராக் கூட்டமைப்பு உள்ள நிலையில், மீண்டும் பயணிகள் விமான சேவையை தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இதன் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு பாதுகாப்பு அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.