அதிக பால் கறக்க எருமைகளுக்கு ஊசி 5 விவசாயிகள் மீது வழக்கு பதிவு
புகாருக்கு உள்ளான 5 விவசாயிகளின் இடங்களில் போலீசாரும், கால்நடை அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் கோட்லா, சாரோடர் ஆகிய கிராமங்களில் கால்நடை விவசாயிகள் சிலர், எருமை மாடுகள் அதிகமான பால் கறப்பதற்காக அவற்றுக்கு ‘ஆக்சிடாசின்’ என்ற ஊசியை போடுவதாக புகார் வந்தது. நேரில் பார்த்த 2 பேர் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.
அதன்பேரில், புகாருக்கு உள்ளான 5 விவசாயிகளின் இடங்களில் போலீசாரும், கால்நடை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். அதில், ‘ஆக்சிடாசின்’ மருந்து என கருதப்படும் 5 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட 5 விவசாயிகள் மீது கால்நடைகளை துன்புறுத்தியதாகவும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். ‘ஆக்சிடாசின்’ மருந்து, டாக்டர்களின் பரிந்துரையுடன் விற்கப்பட வேண்டிய மருந்து ஆகும். அது கால்நடைகளுக்கும், அவற்றின் பாலை குடிக்கும் மனிதர்களுக்கும் தீங்கானதாக கருதப்படுகிறது.