மராட்டிய ஆஸ்பத்திரியில் எனக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை - மந்திரி நவாப் மாலிக் புகார்
ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் எனக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என கோர்ட்டில் மந்திரி நவாப் மாலிக் கூறியுள்ளார்.
காவல் நீட்டிப்பு
மாநில சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி நவாப் மாலிக். இவர் கடந்த பிப்ரவரி மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவல் முடிந்து நேற்று முன்தினம் நவாப் மாலிக் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி ஆர்.என். ரோகேடே நவாப் மாலிக்கின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோர்ட்டில் புகார்
முன்னதாக விசாரணையின் போது மந்திரி நவாப் மாலிக்கிடம் புகார்கள் எதுவும் உள்ளதா என நீதிபதி விசாரித்தார். அப்போது நவாப் மாலிக், " தான் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதனால் சோர்வாக, வலியை உணருகிறேன். ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் எனக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை" என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நவாப் மாலிக் உடல் நல பாதிப்பு காரணமாக ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக கடந்த திங்கட்கிழமை வக்கீல் கோர்ட்டில் தெரிவித்து இருந்தார். அதன்பிறகு 2 நாளில் நவாப் மாலிக் ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயிலுக்கு திரும்பியிருந்தார்.
மந்திரி நவாப் மாலிக் குற்றம்சாட்டிய ஜே.ஜே. ஆஸ்பத்திரி மராட்டிய அரசால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.