மத்திய வேளாண் மந்திரி இன்று இஸ்ரேல் பயணம்

மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தலைமையிலான குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இஸ்ரேல் புறப்பட்டு, 11-ந் தேதி வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

Update: 2022-05-07 20:33 GMT
அங்கு நெல், கரும்பு மற்றும் பருத்தி சாகுபடியில் நுண்ணீர் மற்றும் நவீனமுறை சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை இந்திய குழுவினர் நாளை பார்வையிடுகிறார்கள். பின்னர் மாலையில், டெல்-அவிவ் நகரின் இஸ்ரேல் ஏற்றுமதி மற்றும் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தில், அந்நாட்டின் வேளாண் தொழில்நுட்ப ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களுடன் வேளாண் மந்திரி நரேந்திரசிங் வட்டமேஜை விவாதம் நடத்துகிறார்.

பின்னர் மறுநாள், இஸ்ரேல் வேளாண் ஆராய்ச்சி அமைப்பின் ‘வோல்கனி’ நிறுவனத்தை இந்திய குழு பார்வையிடுகிறது. அங்கு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியர்களை நரேந்திரசிங் சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து வேளாண்தொழிலில் டிரோன் தொழில்நுட்ப பயன்பாடு குறித்த செயல்விளக்கத்தைப் பார்வையிடும் அவர், நெகக் பாலைவனப் பகுதியில் இந்திய காய்கறி வகைகளை சாகுபடி செய்யும் இந்திய வம்சாவளியினரின் பண்ணையையும் பார்வையிடுகிறார். பயணத்தின் நிறைவு நாளன்று, இஸ்ரேல் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஓடெட் போரெரை அவரது அலுவலகத்தில் நரேந்திரசிங் தோமர் தனியாக சந்தித்து பேசுகிறார். நிறைவாக சிபாயிம் பகுதியில் உள்ள சர்வதேச வேளாண் பயிற்சி மையத்தை இந்திய குழுவினர் பார்வையிடுகிறார்கள்.

மேலும் செய்திகள்