மூடப்பட்ட 20 நிலக்கரி சுரங்கங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு திறப்பு - தனியார் மூலம் இயக்க அரசு நடவடிக்கை

நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஏற்கனவே மூடப்பட்ட 20 சுரங்கங்களை மத்திய அரசு மீண்டும் பயன்பாட்டுக்கு திறந்து உள்ளது.

Update: 2022-05-06 23:18 GMT
கோப்புப் படம்
மும்பை,

வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் நாடு முழுவதும் மின்சார தேவை அதிகரித்து இருக்கிறது. ஆனால் இந்த தேவையை ஈடு செய்யும் வகையில் மின்சார உற்பத்தி செய்ய முடியவில்லை.

இதற்கான முக்கிய காரணமாக நிலக்கரி பற்றாக்குறை உள்ளது. உக்ரைன் போரால் இறக்குமதி பாதிக்கப்பட்டதாலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியும் அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு சேர்க்க போதுமான ரெயில் பெட்டிகள் இல்லாததாலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

எனவே பெருகி வரும் நிலக்கரி தேவையை சமாளிக்க, ஏற்கனவே மூடப்பட்டிருந்த அல்லது உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நிலக்கரி இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 20 சுரங்கங்களை முதற்கட்டமாக வருவாய் பகிர்வு அடிப்படையில் தனியார் மூலம் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி நடைமுறையில் உள்ள விலையின் அடிப்படையில் சந்தையில் தனியார் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த வருவாயில் ஒரு பகுதி நிலக்கரி இந்தியா நிறுவனத்துக்கு கிடைக்கும். இந்த சுரங்கங்களின் திறப்பு விழா மும்பையில் நேற்று நடந்தது. மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டு சுரங்கங்களை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

மின்சார தேவை அதிகரிக்கும் நிலையில், இதற்காக நிலக்கரி தேவையும் அதிகரித்து உள்ளது. நிலக்கரி உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடையவும், இறக்குமதியை குறைக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இணைய தனியார் துறைகளை கேட்டுக்கொள்கிறேன்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பிரதமர் மோடி நிர்ணயித்த இலக்கை எட்டியுள்ளபோதும் நாட்டிற்கு இன்னும் நிலக்கரி மற்றும் நிலக்கரி வாயுவாக்கம் தேவைப்படுகிறது. அது அவசியமும் ஆகும். இந்த சுரங்கங்களில் உயர்தர இருப்புக்கள் உள்ளன. ஆனால் பொதுத்துறை நிறுவன பயன்பாடுகளின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்ட அல்லது நிறுத்தப்பட்ட இந்த சுரங்கங்களுக்கு புத்துயிர் அளிக்க முடியவில்லை.

இந்த 20 சுரங்கங்களில் பிரித்தெடுக்கக்கூடிய இருப்புக்கள் சுமார் 38 கோடி டன் உள்ளன. அதில் 10 முதல் 15 சதவிகிதம் வரை பிரித்தெடுக்கப்பட்டாலும், சுமார் 4 கோடி டன் உயர்தர நிலக்கரி நமக்குக் கிடைக்கும். இந்த நடவடிக்கையில் தனியார் துறையினருக்கு முழு ஆதரவையும் நாங்கள் வழங்குவோம்.

இவ்வாறு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்