பீகார் அரசின் செயல்பாடுகள் பற்றிய பிரசாந்த் கிஷோரின் மதிப்பீட்டை நிராகரித்த நிதிஷ்குமார்
பீகாரில் அரசியல் மாற்றத்துக்கான பாத யாத்திரையை தொடங்கப்போவதாக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
பாட்னா,
பீகாரில் அரசியல் மாற்றத்துக்கான பாத யாத்திரையை தொடங்கப்போவதாக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். மேலும், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பீகாரை முன்னேற்ற தவறி விட்டதாகவும், வளர்ச்சி அளவுகோல்களில் பீகார் அடிமட்டத்தில் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் இதுகுறித்து நிதிஷ்குமாரிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
சிலர் சொல்வதற்கெல்லாம் நான் முக்கியத்துவம் அளிக்க மாட்டேன். எனது அரசு, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பத்திரிகையாளர்களே முடிவு செய்யலாம்.
கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இது மத்திய அரசின் கொள்கை முடிவு. அதுபற்றி தனியாக ஆய்வு செய்வோம். மீண்டும் அதிகரித்து வரும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பதில்தான் எங்கள் கவனம் இருக்கிறது. மின்தட்டுப்பாடு பிரச்சினையை தீர்க்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். இது மிகவும் பரவலாக உள்ள பிரச்சினை.
இவ்வாறு அவர் கூறினார்.