ஆணவ படுகொலை விவகாரம்: தெலங்கானா தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
ஐதராபாத்தில் மதம் மாறி திருமணம் செய்த நபர், மனைவியின் சகோதரனால் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மர்பல்லி பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ (வயது 26). இந்து மதத்தை சேர்ந்த இவரும் அதேமாவட்டம் ஹனபூர் கிராத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்துள்ளனர்.
பல ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினருக்கு இந்த காதல் விவகாரம் தெரியவர, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி 31-ம் தேதி நாகராஜூ - சுல்தானா திருமணம் செய்துகொண்டனர்.
தங்கள் எதிர்ப்பையும் மீறி நாகராஜூவை திருமணம் செய்துகொண்டதால் சுல்தானாவின் சகோதரன் சையது மொபின் முகமது உள்பட குடும்பத்தினர் மிகுந்த கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில், சரோன் நகரின் முக்கியமான பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் நடுவே சுல்தானாவும் அவரது கணவர் நாகராஜூவும் பைக்கில் சென்றபோது அந்த பைக்கை முகமது உட்பட அவரது நண்பர்கள் இடைமறித்து இரும்பு கம்பியால் நாகராஜூவின் தலையில் பயங்கரமாக தாக்கியுள்ளார்.
தனது கணவரை காப்பாற்றக்கோரி பொதுமக்களிடம் சுல்தானா மன்றாடியும், அவர்கள் கண்டுகொள்ளாமல் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் நிலைகுலைந்த நாகராஜூ நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மதம் மாறி திருமணம் செய்ததால் நடுரோட்டில் மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மதம் மாறி திருமணம் செய்ததால், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தெலங்கானா தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்து உள்ளது.