ஒடிசாவில் புஷ்பா பாடலுக்கு நடனமாடிய பள்ளி மாணவர்கள்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
ஒடிசாவில் உயர்நிலைப்பள்ளி வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் புஷ்பா பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
பெர்ஹாம்பூர்,
ஒடிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் அமைந்துள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்காக ஆசிரியர்கள் ஆலோசனைகள் வழங்கினர். பின்னர் வகுப்பறையை பூட்டாமல் ஆசிரியர்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அங்கிருந்த ஒருசில மாணவர்கள் புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவல்லி பாடலுக்கு நடனமாடியுள்ளனர். மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த எல்இடி தொலைக்காட்சியில் இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அதிகாரியின் கூற்றுப்படி, அறையில் இருந்த சில மாணவர்கள் தங்கள் மொபைல் போன்களுடன் தொலைக்காட்சியை இணைத்திருக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.
மாணவர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியைக்கு காரணம் கோட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. ஆனால், தலைமை ஆசிரியை திருப்திகரமான பதில் அளிக்காததால், பணியில் அலட்சியத்துடன் செயல்பட்டதை காரணம் காட்டி தலைமை ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.