மற்ற மாநிலங்களை விட மேற்குவங்காளம் சிறந்தது - மம்தா பானர்ஜி

மேற்குவங்காளம் மற்ற மாநிலங்களை விட சிறந்த நிலையில் உள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-06 03:29 GMT
Image Courtesy: PTI
கொல்கத்தா,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த மாதம் 4-ம் தேதி மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில், நீங்கள் குஜராத்திற்கு சென்றுள்ளீர்கள். குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு எதிராக ஏதேனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. அவர்கள் எதேனும் தவறு செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படலாம். ஆனால், நீங்கள் மேற்குவங்காளத்திற்கு சென்றீர்களானால் நீங்கள் கொல்லப்படலாம். நீங்கள் அங்கு செல்லாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது’ என்றார்.

இதற்கிடையில், உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று மேற்குவங்காளம் சென்றுள்ளார். மேற்குவங்காளத்தில் மம்தா தலைமையிலான அரசு 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பின் அமித்ஷா அம்மாநிலம் செல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்த கருத்து மற்றும் அவரின் மேற்குவங்காள வருகை குறித்து மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

மேற்குவங்காளத்தில் தொடர்ந்து 11-வது ஆண்டாக ஆட்சியில் இருப்பதை கொண்டாடும் வகையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

அப்போது, அவர் பேசுகையில், அனைவரையும் பழிகூறுவது சரியல்ல. 11 கோடி மக்கள் தொகையை கொண்ட மாநிலத்தில் 5 சம்பவங்கள் நடைபெற்றால் அந்த 5 சம்பவங்களுக்கும் நீங்கள் கண்டனம் தெரிவித்து அதில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க கோரினால் நான் மகிழ்ச்சியடைவேன். ஆனால், அனைவரையும் குற்றஞ்சாட்டுவது சரியல்ல. மேற்குவங்காள செல்லாதீர்கள் நீங்கள் கொல்லப்படலாம் என யாரேனும் கூறுவது என்னை காயப்படுத்துகிறது. 

மற்ற மாநிலங்களை விட மேற்குவங்காளம் சிறந்த மாநிலமாகும். உத்தரபிரதேசத்தில் இன்று ஒரு பெண் நியாயம் கிடைவேண்டுமென்றால், பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாக்கப்படுகின்றனர். ஆனால், மேற்குவங்காளத்தில் நாங்கள் அவ்வாறு செய்வதில்லை. குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் எனது கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நான் விடமாட்டேன்’என்றார். 

மேலும் செய்திகள்