ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் 58 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம்
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதத்துக்குள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணிகளை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன.
புதுடெல்லி,
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதத்துக்குள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணிகளை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் கொரோனா காரணமாக சென்ற ஆண்டுக்கான காலக்கெடுவை கடந்த மார்ச் 31-ந் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது.
ஆனாலும் இந்த காலக்கெடு முடிந்த பின்னரும் 58,275 ஓய்வூதியதாரர்கள் இன்னும் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகி இருந்தன. எனவே இந்த விவகாரத்தில் ராணுவ அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து உள்ளது. அடையாளத்தை நிரூபிக்காத இந்த 58,275 பேருக்கும் ஒருமுறை சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இவர்கள் வருகிற 25-ந் தேதிக்குள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அத்துடன் அவர்களுக்கான ஏப்ரல் மாத ஓய்வூதியமும் நேற்று மாலைக்குள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.