காஷ்மீர்: ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு,
காஷ்மீர் தோடா மாவட்டத்தில் உள்ள காஷ்திகாரை சேர்ந்தவர் ஆசிப் சபீர் நாயக். அவரது தந்தையான சபீர் உசைன் நாயக் என்ற காலித் சபீர், தற்போது பாகிஸ்தானில் உள்ளார். தோடா மாவட்டத்தில் உள்ள மர்மாத் கிராமத்தைச் சேர்ந்த சப்தார் உசைன் என்ற எசானும் தற்போது பாகிஸ்தானில் வசிக்கிறார்.
ஆசிப் சபீர் மாணவர் என்ற போர்வையில் அடிக்கடி பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். அவரும், மற்ற இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
இந்த மூவரும் பாகிஸ்தானில் திரைக்கு பின்னால் இருந்தபடி, காஷ்மீரில் பயங்கரவாத, பிரிவினைவாத நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வந்துள்ளனர். சமீபத்தில் இந்தியா வந்த ஆசிப் சபீர் மீண்டும் பாகிஸ்தான் தப்பிச்செல்ல முற்பட்டபோது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், பயங்கரவாத செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கு மூளையாக செயல்பட்டு வந்த சபீர் உசைனும், அவரது உதவியாளர் சப்தார் உசைனும் பாகிஸ்தானிலேயே தலைமறைவாக உள்ளனர்.
தற்போது இந்த 3 பேர் மீதும் ஜம்முவில் உள்ள தடா, பொடா, தேசிய விசாரணை அமைப்பு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில விசாரணை அமைப்பு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.