உ.பி: டெம்போ மீது கார் மோதி விபத்து - 8 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் டெம்போ மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டம் சிலொலி கிராமத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 15-க்கும் மேற்பட்டோர் டெம்போவில் பாடியாலி பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றனர். அவர்கள் அனைவரும் ஆசிரமத்திற்கு சென்றுவிட்டு இன்று காலை மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
படோன் - மெயின்புரி நெடுஞ்சாலையில் டெம்போ வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் டெம்போ கவிழ்ந்தது. இந்த விபத்தில் டெம்போவில் பயணித்த 7 பேர், காரில் பயணித்த ஒருவர் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.