ராஜஸ்தான்; ஜோத்பூரில் பதற்றம் நீடிப்பு -ஊரடங்கு அமல்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜோத்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. கல் வீச்சில் 4 போலீசார் உள்பட 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து ஜோத்பூர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜோத்பூர் பகுதி முழுவதும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டத்தைக் கூடிய முதல் மந்திரி அசோக் கெலாட் தேவையான நடவடிக்கைகளை எடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பச் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மாநில மந்ஹிரி ராஜேந்திர யாதவ், கூடுதல் தலைமைச் செயலாளர் அபய் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலமையை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார்.
தற்போது அங்கு நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. ரம்ஜான் பண்டிகையான இன்று தொழுகைக்குப் பிறகு ஜலோரி கேட் பகுதியில் சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். மீண்டும் வன்முறை வெடிக்கும் சூழல் உருவானது.
உடனடியாக போலீசார் தடியடி நடத்தி நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நீடிக்கும் நிலையில், உதய் மந்திர், நகோரி கேட், கந்தா பல்சா, பிரதாப் நகர், தேவ் நகர், சூர் சகர் மற்றும் சர்தர்புரா ஆகிய போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு இடங்களில் மே 4 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.