5 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக நாளை நிபுணர் குழு ஆய்வு

5 முதல் 12 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக நாளை நிபுணர் குழு ஆய்வு நடத்துகிறது.

Update: 2022-05-03 08:58 GMT
புதுடெல்லி,

கொரோனா நோய் தொற்று பரவலை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. இதையடுத்து தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் இதுவரை 189.41 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன. 12 முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

இதற்கிடையே 5 வயது முதல் 12 வயதுக்குபட்டோருக்கு ‘கோர்பேவாக்ஸ்’ தடுப்பூசி செலுத்த அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருத்துவ கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த வாரம் அனுமதி வழங்கி உள்ளது.

இதைத் தொடர்ந்து 5 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறையை மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான தரவை மதிப்பாய்வு செய்ய நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு நாளை (4ந்தேதி) கூடுகிறது.

இந்த கூட்டத்தில் 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான விவரங்களை அரசு வழங்கும். இதனை ஆலோசனை குழு மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

கடந்த 26ந்தேதி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசிக்கும், 5 முதல் 12 வயதுடையோருக்கு பயாலஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவேக்ஸ் தடுப்பூசிக்கும் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்