கர்னூல்: இளம்பெண் கொலை செய்து பிளாஸ்டிக் பேரலில் அடைப்பு..!

கர்னூல் அருகே இளம்பெண் பிளாஸ்டிக் பேரலில் இறந்து கிடந்த நிலையில் துப்பு கொடுப்பவர்களுக்கு போலீசார் பரிசு அறிவித்துள்ளனர்.

Update: 2022-05-03 07:07 GMT
திருப்பதி:

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் வருவல் மண்டலம் சோமயாஜுல கிராமத்தில் ஊருக்கு வெளியே சாலையின் குறுக்கே சிறிய அளவிலான பாலம் உள்ளது. அங்கு சிறிய அளவிலான பிளாஸ்டிக் பேரல் ஒன்று இருந்துள்ளது.

அப்போது அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் இறந்த நிலையில் உள்ளே இருந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது குறித்து கர்நூல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேரலில் அடைக்கப்பட்டு இருந்த பெண்ணின் உடலை மீட்டனர். கொலை செய்யப்பட்ட பெண் சேலை அணிந்து கழுத்தில் டாலர் செயின் மற்றும் கம்மல், மூக்குத்தி அணிந்து இருந்தார். இளம்பெண்ணை வேறு எங்கேயோ கொலை செய்து எடுத்துவந்து பேரலில் அழித்துவிட்டு சென்றது தெரியவந்தது

இதையடுத்து இளம்பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கர்னூல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் அப்படியே இருப்பதால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இறந்து கிடந்த பெண் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு போலீஸ் சார்பில் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்