கேரளா: ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு - 17 பேருக்கு தீவிர சிகிச்சை...!

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழந்து உள்ளார்.

Update: 2022-05-02 03:03 GMT
கொழிஞ்சாம்பாறை,

கேரள மாநிலம் காசர்கோடு சிறுவத்தூர் கரிவெல்லூர் என்ற இடத்தில் வசிப்பவர் நாராயணன்-பிரசன்னா தம்பதி. இவர்களது ஒரே மகள் தேவானந்தா (17). இங்கு உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். 

சம்பவத்தன்று நேற்று தேவானந்தா இங்கு உள்ள ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டு உள்ளார். இதேபோன்று அந்த கடையில் 50-க்கு மேற்பட்டவர்கள் ஷவர்மா சாப்பிட்டு சென்று உள்ளார்கள்.

பிற்பகல் 3 மணியளவில் மாணவிக்கு வயிற்றுப்போக்கு கடுமையான காய்ச்சல் தலைவலி ஆகியவை ஏற்பட்டது. பெற்றோர்கள் காஞ்சங்காடு அரசு மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்கு சேர்த்தார்கள்.

அங்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்து போனார். அதே நேரத்தில் அந்த கடையில் ஷவர்மாக சாப்பிட்டு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அதை அரசு மருத்துவமனையில் சுமார் 17 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், இவர்கள் சாப்பிட்ட ஷவர்மா விஷமாக மாறி உள்ளது. அதனால் தான் இவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதில் மாணவி பரிதாபமாக இறந்து போனார் என்பது கவலைக்குரியதாகும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையொட்டி காஞ்சங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கடையை சோதனை போட்டார்கள்.  அங்கு கடை ஊழியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்