தேர்தலில் 3-வது அணி எப்போதுமே வெற்றிபெற முடியாது, 2-வது அணியால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் - பிரசாந்த் கிஷோர்

தேர்தலில் மூன்றாவது அணி எப்போதுமே வெற்றிபெற முடியாது, இரண்டாவது அணியால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-30 14:46 GMT
புதுடெல்லி, 

தேர்தலில் மூன்றாவது அணி எப்போதுமே வெற்றிபெற முடியாது, இரண்டாவது அணியால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் அளித்த பேட்டியில், மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், வரும் 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மூன்றாவது அணியாக உருவெடுக்க அவர் உதவுவதாக தகவல் வெளியானது குறித்து கேட்கப்பட்டது. 

அதற்கு அவர் கூறியதாவது:- 

“நமது நாட்டில் எந்த ஒரு மூன்றாம் அணியும் தேர்தலில் வெற்றி பெற முடியாது.

பாஜகவை தோற்கடிக்க விரும்பும் எந்தவொரு கட்சியும், இரண்டாவது முன்னணிக் கட்சியாக உருவாக வேண்டும்.

நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆனால் அது இரண்டாவது அணியாக இல்லை.

காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையும் நானும் பல விஷயங்களை ஒப்புக்கொண்டோம். 

ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியும், அவர்களிடம் பல பெரிய தலைவர்கள் உள்ளனர். 

அவர்களுக்கு நான் தேவையில்லை. நான் கட்சியில் எந்தப் பங்கையும் விரும்பவில்லை, எதிர்காலத்திற்கான ஒரு வரைபடத்தை ஒப்புக்கொண்டவுடன், அது செயல்படுத்தப்பட வேண்டும். அதையே நான் விரும்பினேன்.

காங்கிரஸ் கட்சியில் மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு, அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவே பொறுப்பு. அவர்கள் என்னை அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவின் ஒரு பகுதியாக வேண்டும் என்று விரும்பினர்.ஆனால், அந்த குழுவில் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன

2014க்குப் பிறகு முதல் முறையாக, காங்கிரஸ் கட்சி தனது எதிர்காலத்தை பற்றி, அதன் கட்டமைக்கப்பட்ட விதத்தில் விவாதித்துள்ளது.

இது மிகவும் ஆழமாக வேரூன்றிய கட்சி. எதிர்காலத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பில்லை என்று கூறுவது தவறாக அமையும், ஆனால், அவர்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

2024ல் பிரதமர் மோடிக்கு யார் சவால் விடுவார்கள் என்று தெரியவில்லை."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்