நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வேண்டுகோள்
ஐகோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப பெயர்களை விரைவில் பரிந்துரைக்குமாறு அவற்றின் தலைமை நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி,
ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகளின் 39-வது மாநாடு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
அதில் தலைமை நீதிபதி ரமணா பேசுகையில், நான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பொறுப்பேற்றபிறகு, ஐகோர்ட்டுகளில் உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவது குறித்துத்தான் முதலில் கடிதம் எழுதினேன். முதன்முதலில் காணொலி வாயிலாக உரையாடியபோதும், ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சமூகப் பன்முகத்தன்மையுடனான பெயர்களை விரைவில் பரிந்துரைக்கவும் வலியுறுத்தியிருந்தேன்.
நம் அனைவரது கூட்டுமுயற்சியின் காரணமாக, ஓராண்டில் ஐகோர்ட்டுகளில் 126 நீதிபதிகளை நியமித்துள்ளோம். 54 பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது. காலிப் பணியிடங்களை கொண்டுள்ள ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள், அதற்கான பெயர்களை விரைவில் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் வாயிலாக ஐகோர்ட்டுகளில் உள்ள 212 நீதிபதி காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என நம்புகிறேன் என்றார்.
இந்த மாநாட்டில், ஐகோர்ட்டுகளில் நீதிபதிகள் நியமனத்துடன், நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளை முன்னுரிமை அடிப்படையில் இணையம் வழியாக இணைப்பது, மாவட்ட கோர்ட்டுகளுக்கு தேவையான மனித வளம், பணியாளர் கொள்கை, கோர்ட்டுகளின் உள்கட்டமைப்பு, திறன் வளர்ப்பு, நீதிசார் சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், யு.யு.லலித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்-மந்திரிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.