கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்; ஆசிட்டை குடிக்க செய்து, கொலை செய்த கணவர்
தெலுங்கானாவில் கர்ப்பிணி மனைவிக்கு கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை வாயில் ஊற்றி கொலை செய்து விட்டு கணவர் தப்பியோடி விட்டார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் வருணி மண்டலத்திற்கு உட்பட்ட ராஜ்பேட் தண்டா என்ற பகுதியில் வசித்து வருபவர் தருண். இவரது மனைவி கல்யாணி. 4 வருடங்களுக்கு முன் இந்த தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், கல்யாணி கர்ப்பம் தரித்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்து, அவரை வருண் துன்புறுத்த தொடங்கியுள்ளார். அழகாக இல்லை என்று தொடங்கி அதிக வரதட்சணை வாங்கி வா? என்று கூறி நாள்தோறும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், ஆத்திரமடைந்த தருண் கழிவறையை சுத்தம் செய்வதற்கு வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கல்யாணியின் வாயில் வலுகட்டாயப்படுத்தி ஊற்றி குடிக்க வைத்துள்ளார்.
இதில், உடல்நலம் பாதித்து அவர் சுருண்டு விழுந்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் பயந்துபோய் நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கல்யாணியை சேர்த்து உள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து கல்யாணியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு கல்யாணியை, தருண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து கொலை செய்துள்ளனர் என தெரிவித்து உள்ளனர். அதன்பேரில், தருண் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனினும், போலீசில் சிக்காமல் தருண் தப்பியோடி விட்டார். அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.