9 முக்கிய துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு: மத்திய தொழிலாளர் நல மந்திரி பெருமிதம்

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளது. அதற்கு மத்திய தொழிலாளர் நல மந்திரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-28 23:55 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

அமைப்புசார்ந்த தொழில்களில் உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், நிதிச்சேவைகள், ஓட்டல் ஆகிய 9 முக்கிய துறைகள், 85 சதவீத வேலைவாய்ப்பு நிறைந்த துறைகள் ஆகும். 

அதனால், மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், காலாண்டுக்கு ஒருதடவை அத்துறைகளில் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை திரட்டி ஆய்வறிக்கை வெளியிடுவது வழக்கம். அந்த அடிப்படையில், கடந்த நிதிஆண்டின் 3-வது காலாண்டுக்கான (அக்டோபர்-டிசம்பர்) வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையை தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், மேற்கண்ட காலாண்டில் 9 முக்கிய துறைகளில் மொத்த பணியாளர் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சமாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டை (ஜூலை-செப்டம்பர்) விட இது 4 லட்சம் அதிகம் ஆகும்.

இவர்களில் ஆண் ஊழியர்கள் 68.4 சதவீதம்பேர். பெண் ஊழியர்கள் 31.6 சதவீதம்பேர்.

9 துறைகளில், உற்பத்தி துறையில் அதிகபட்சமாக 39 சதவீத தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

இந்த ஆய்வறிக்கைக்கு மத்திய தொழிலாளர் நல மந்திரி பூபேந்தர் யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘அமைப்புசார்ந்த தொழில்களில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதை ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்