சாலையில் வீசப்பட்ட பத்மஸ்ரீ சான்றிதழ்! 90 வயது கலைஞரை மரியாதைக் குறைவாக நடத்திய அரசுக்கு கடும் கண்டனம்

அரசு குடியிருப்பில் இருந்து காலி செய்ய சொன்னதால் 90 வயது பத்மஸ்ரீ கலைஞர் நடுத்தெருவில் நிற்கும் அவலம் அரங்கேறி, அரசின் இந்த செயல் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

Update: 2022-04-28 15:30 GMT
புதுடெல்லி,

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஒடிசி நடன கலைஞரான குரு மயாதார் ராவத் டெல்லியிலுள்ள அரசு குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட விதம் விவாதத்தை கிளம்பியுள்ளது.

1980-களில் இருந்து, 40-70 வயதுக்கு இடைப்பட்ட தேசிய கலைஞர்களுக்கு, 3 ஆண்டு காலத்திற்கு அரசு சார்பில் வாடகைக்கு தங்குமிடங்கள் ஒதுக்கப்பட்டன. அவை 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டன.

அதன் பின்னர், 2020-ம் ஆண்டு இந்த குடியிருப்புகளை காலி செய்யுமாறு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

90 வயதான ஒடிசி நடன கலைஞரான குரு மயாதார் ராவத், டெல்லியில் உள்ள ஏசியன் கேம்ஸ் அரசு குடியிருப்பில் தங்கியிருந்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து குரு மயாதார் உட்பட பல கலைஞர்கள், அரசின் உத்தரவுக்கு தடை கோரி கோர்ட்டை அணுகினர்.ஆனால், வழக்கு அரசுக்கு சாதகமாக அமைந்தது. மேலும், கலைஞர்கள் அனைவரும் வெளியேற ஏப்ரல் 25 வரை காலக்கெடு விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது கலைஞர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று குரு மயாதார் உள்ளிட்ட கலைஞர்கள் தாங்கள் தங்கி இருந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களது உடைமைகள் அனைத்தும் சாலையில் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், மூத்த கலைஞர்கள் வெளியேற்றப்பட்ட விதம் விவாதத்தை கிளம்பியுள்ளது.

இதுகுறித்து குரு மயாதார் மகள் கூறும்போது, “நான் அதிகாரிகள் வீட்டுக்கு வரும்போது உணவு பரிமாறிக் கொண்டிருந்தேன். நான் உடைந்து போயிருக்கிறேன். 

இந்த நாட்டின் தலைசிறந்த நடன கலைஞர்களை உருவாக்கிய எனது தந்தையை நீங்கள் இப்படி தான் நடத்துவீர்களா...? 

அவருக்கு சொந்தமாக ஓர் அங்குல நிலம் கூட இல்லை. இப்படி தூக்கி எறிவதற்குரியவர் அல்ல என் தந்தை. 

இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் அடிப்படை கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கு தகுதியானவர்கள்” என்று மிகுந்த மன வேதனையுடன் கூறினார்.

மேலும் செய்திகள்