மத்திய அரசால் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படாவிட்டால் ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம்!
மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீடை சரிசெய்ய இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது
மும்பை,
நாட்டில் அதிக வரி வருவாய் செலுத்தி வரும் மாநிலங்களில் மராட்டியம் முதன்மையாக விளங்குகிறது.மத்திய அரசுக்கு செல்லும் மொத்த மத்திய ஜிஎஸ்டியில் 15 சதவீதத்தை மராட்டிய மாநிலம் வழங்குகிறது. கடந்த ஆண்டில், ரூ.46,664 கோடி வரி செலுத்தி உள்ளது.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கப்பட்ட 2017, ஜூலை 1-ம் தேதியிலிருந்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீடை சரிசெய்ய இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது
இந்நிலையில், வரும் ஜூன் மாதத்துடன் மத்திய அரசு அறிவித்த ஐந்தாண்டு காலம் நிறைவடைகிறது.அதே வேளையில், இதனை நீட்டிக்க வேண்டுமென்று பல மாநிலங்கள் மத்திய நிதியமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளன.
மத்திய அரசு வழங்கி வரும் ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிக்கப்படாவிட்டால், மராட்டிய மாநிலத்திற்கு ஓர் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
“ஜூன் மாதத்திற்கு பின்னர், மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிக்கப்படாவிட்டால், மராட்டிய மாநிலத்திற்கு ஓர் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
2020-21ல், மத்திய அரசு மாநிலத்திடம் இருந்து ரூ.46,664 கோடி வசூலித்துள்ளது. அதில் எங்களுக்கு வெறும் 521 கோடி ரூபாய் கிடைத்தது.
மேலும், மத்திய அரசு தாமதமாக பணம் செலுத்துவது மாநிலத்தில் நிர்வாக சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது” என்று மராட்டிய மாநில நிதித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.