டெல்லி நிர்வாகம் யார் கையில்; மத்திய அரசுக்கு எதிராக டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில் விசாரணை

டெல்லி அரசு எடுக்கும் முடிவுகளை, மத்திய அரசு லெப்டிணண்ட் கவர்னர் மூலம் தடுத்து செயல்பட விடாமல் செய்கிறது.

Update: 2022-04-27 13:07 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மத்திய குடிமைப்பணிகள் அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக டெல்லி அரசு தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது.

டெல்லியில் உள்ள அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பணியிடங்கள் மீதான கட்டுப்பாட்டை  மத்திய அரசு கொண்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டதாவது:-

“டெல்லி தேசிய தலைநகர் என்பதால், அரசு ஊழியர்களின் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பது அவசியம். டெல்லி தேசத்தின் முகம். உலகமே இந்தியாவை டெல்லி வழியாக பார்க்கிறது.

டெல்லியின் சட்டங்களின் முக்கிய அம்சம் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்ததாக இருக்கக்கூடாது.

மத்திய அரசுக்கு டெல்லியின் நிர்வாகத்தின் மீது சிறப்பு அதிகாரங்கள் இருப்பதும், முக்கியமான பிரச்சினைகளில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதும் அவசியம்.

மத்திய அரசுக்கும் டெல்லிக்கும் இடையே ஏதேனும் நேரடி மோதல்களைத் தடுக்கும் வகையில் டெல்லியை நிர்வகிப்பதற்கான சட்டங்கள் உள்ளன.

டெல்லியின் மீது மத்திய அரசு கட்டுப்பாட்டை வைத்திருப்பது "தேசிய நலனில் முக்கியமானது". இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப வேண்டும்” என்று மத்திய அரசின் தரப்பில் வாதிடப்பட்டது.

மறுமுனையில், டெல்லி அரசு சார்பில் கூறப்பட்டதாவது, “மத்திய அரசு டெல்லி சட்டமன்றத்தை அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது. டெல்லி அரசு எடுக்கும் முடிவுகளை, மத்திய அரசு லெப்டிணண்ட் கவர்னர் மூலம் தடுத்து செயல்பட விடாமல் செய்கிறது” என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்