பிரதமர் மோடி விரைவில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்சு நாடுகளுக்கு பயணம்..!
பிரதமர் மோடி அடுத்த வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ அரசுமுறை பயணம் செல்ல இருக்கிறார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி வருகிற மே மாதம் 2 முதல் 4-ந்தேதி வரை ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ அரசுமுறை பயணம் செல்ல இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் பிரதமர் மோடி செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். பெர்லினில் பிரதமர் மோடி, ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஸ்கால்ஸ் -ஐ சந்திப்பார். இருவரும் இணைந்து கூட்டாக ஒரு வணிக நிகழ்வில் உரையாற்றுவார்கள். அதன்பிறகு பிரதமர் மோடி, ஜெர்மனியில் உள்ள இந்தியர்களுடன் உரையாற்றுவார்.
அதன்பிறகு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சனின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வ பயணமாக கோபன்ஹேகனுக்கு செல்கிறார். டென்மார்க் நடத்தும் 2-வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வெளியீட்டின் படி, இந்த பயணம் இரு தரப்புக்கும் அதன் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும். மேலும் நம்முடைய பன்முக ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராயும். இந்த பயணத்தின் போது, பிரதமர் இந்தியா-டென்மார்க் வணிக மன்றத்தில் கலந்து கொள்வதோடு, புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றுவார்.
2-வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டின் போது, பிரதமர் மோடி, ஐஸ்லாந்தின் பிரதமர் கேத்ரின் ஜாகோப்ஸ்டோட்டிர், நார்வேயின் பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், ஸ்வீடனின் பிரதம மந்திரி மாக்டலினா ஆண்டர்சன் மற்றும் பின்லாந்தின் பிரதமர் சன்னா மரின் ஆகியோருடனும் கலந்துரையாடுவார்.
தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்பு, காலநிலை மாற்றம், புதுமை மற்றும் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வளர்ந்து வரும் உலகளாவிய பாதுகாப்பு சூழல் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் இந்தியா-நார்டிக் ஒத்துழைப்பு போன்றவை குறித்து நார்டிக் உச்சிமாநாடு கவனம் செலுத்தும். முதல் இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு 2018 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மே 4-ந்தேதி இந்தியா திரும்பும் பிரதமர் மோடி, பாரிஸில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க இருக்கிறார்.