5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி: மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2022-04-27 00:26 GMT
புதுடெல்லி,

நாடு கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து முழுவீச்சுடன் போராடி வருகிறது.

திடீர் எழுச்சி

தேசிய அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து கட்டுக்குள் இருந்து வந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக இதில் மாற்றம் ஏற்பட்டது. தினசரி தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல எழுச்சி பெறத்தொடங்கியது. குறிப்பாக டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் தொற்று பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது. கேரளாவிலும் மறுபடியும் தொற்று அதிகரிக்கிற போக்கு காணப்படுகிறது.

பிரதமர் இன்று ஆலோசனை

இந்த நிலையில் தொற்று பரவல் அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணிக்கு மாநில முதல்-மந்திரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

காணொலி காட்சி வழியாக நடத்தப்படுகிற இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, நாட்டின் கொரோனா நிலைமை குறித்து மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் விளக்கம் அளிக்கிறார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு இதில் புதிய யுக்திகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புநிலவுகிறது.

தடுப்பூசிகள்

இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் பேராயுதங்களாக விளங்குகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கிய கொரோனா தடுப்பூசி திட்டம் பல கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது 18 வயது முடிந்து 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டவர்களுக்கு ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி, ‘முன்எச்சரிக்கை டோஸ்’ என்ற பெயரில் போடப்படுகிறது.

அதைத் தவிரவும், 12 முதல் 14 வயதான குழந்தைகளுக்கு கடந்த மாதம் 16-ந் தேதி முதல் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

மத்திய அரசு அனுமதி

பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதாலும், தொற்று மூலம் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிருப்பதாலும் தொற்று பரவல் பெரிய அளவில் அவர்களைப் பாதிக்காது என்று தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் பள்ளிக்கூடங்கள் திறந்து, நேரடி வகுப்புகள் நடைபெறுகிற நிலையில் குழந்தைகளை கொரோனாவில் இருந்து காப்பதற்காக மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்குமத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல்

அவர்களுக்கு தடுப்பூசி போட ஏதுவாக ஒரே நேரத்தில் கோர்பேவாக்ஸ் மற்றும் கோவேக்சின் என 2 தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டு ஒப்புதலை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கி உள்ளது.

மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் தொழில்நுட்ப குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த அனுமதி தரப்பட்டுள்ளது.

இதை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயலாஜிக்கல் இ நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இந்த தடுப்பூசி 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு போடப்படும்.

கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கறது. இந்த தடுபபூசி 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கானது.

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜைடஸ் கேடிலா நிறுவனத்தாரின் ஜைகோவ்-டி தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்