இவ்வளவு மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை - ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த நபர் புகார்!
ஏர் இந்தியா விமானத்தின் உட்புறம் மோசமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
புதுடெல்லி,
ஏர் இந்தியா விமானத்தின் உட்புற கேபின் மிக மோசமாக உள்ளதாகவும், பயணிகள் இருக்கையில் கை வைக்குமிடம் உடைந்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
கடனில் சிக்கியிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும், டாடா குழுமம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி பெற்றது.
இந்த நிலையில், ஏர் இந்தியாவின் ஏர்பஸ் - ஏ320 விமானத்தின் மோசமான உட்புறங்களின் படங்களை, அதில் பயணம் செய்த பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அவர் பயணம் செய்த விமானத்தின் நம்பரையும் குறிப்பிட்டு, உரிய நடவடிக்கை எடுக்குமறு கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் நேற்று நடந்தது.
இதனையடுத்து, டாடா குழுமத்தின் வசம் உள்ள ஏர் இந்தியா விமானத்தில் இருக்கும் சிக்கலை சரிபார்த்து, விரைவில் சரிசெய்யுமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) கேட்டுக் கொண்டது.
அந்த விமானம், திங்கள்கிழமை இரவு கொல்கத்தாவில் இருக்கும். அந்த நேரத்தில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது போன்றதொரு சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று நடந்தது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணியின் புகாரின் பேரில், அந்த விமானத்தை விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் தரையிறக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த விமானத்தில் உட்புற கேபின் பேனல்கள் செயலிழந்ததாகவும், அழுக்கான இருக்கைகள் கொண்டதாகவும் இருப்பதாக பயணிகள் புகார் அளித்தனர்.
அந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பழுதுபார்ப்புகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, ஒரு நாள் கழித்து தான் மீண்டும் இயக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்போது ஏர் இந்தியா விமானத்தின் உட்புறம் மோசமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.