பிரதமர் மோடி 2-வது ஆட்சியின் 3-வது ஆண்டு கொண்டாட்டம்: தயாராகும் பா.ஜனதா..!!
பிரதமர் மோடி 2-வது ஆட்சியின் 3-வது ஆண்டு கொண்டாட்டத்துக்கு பா.ஜனதா தயார் ஆகி வருகிறது.
புதுடெல்லி,
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்றது. அந்த ஆண்டு மே 30-ந்தேதி, நரேந்திர மோடி 2-வது தடவையாக பிரதமராக பதவி ஏற்றார். அவரது 2-வது ஆட்சியின் 1 மற்றும் 2-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள், கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.
அடுத்த மாதம் 30-ந்தேதியுடன் 3-வது ஆண்டு நிறைவடைகிறது. இப்போது, கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், 3-வது ஆண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. அதை எப்படி கொண்டாடுவது என்பது குறித்து ஆலோசிக்க மத்திய மந்திரிகள் அனுராக் தாக்குர், ராஜீவ் சந்திரசேகர், பா.ஜனதா பொதுச்செயலாளர்கள் அருண்சிங், சி.டி.ரவி, புரந்தரேஸ்வரி, தலைமை செய்தித்தொடர்பாளர் அனில் பலுனி, சிவபிரகாஷ், லால்சிங் ஆர்யா, எம்.பி.க்கள் வினய் சகஸ்ரபுத்தே, ராஜ்தீப் ராய், அபராஜிதா சாரங்கி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவின் கூட்டம் நேற்று பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மத்திய மந்திரி அனுராக் தாக்குரும், இதர நிர்வாகிகளும் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். ஒரு வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. மத்திய அரசின் திட்டங்களை பிரபலப்படுத்தும்வகையில், எந்தெந்த நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்பது வரும் நாட்களில் இறுதி செய்யப்படும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.