அனுமன் பஜனை விவகாரம்; எம்.பி. நவ்னீத் ரானா, கணவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

அனுமன் பஜனை விவகாரத்தில் அமராவதி எம்.பி. நவ்னீத் ரானா மற்றும் எம்.எல்.ஏ.வான அவரது கணவர் ரவி ரானா ஆகியோர் 14 நாள் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2022-04-24 08:46 GMT


புதுடெல்லி,



மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லம் முன் அனுமன் பஜனை பாட இருக்கிறோம் என அமராவதி எம்.பி. நவ்னீத் ரானா மற்றும் எம்.எல்.ஏ.வான அவரது கணவர் ரவி ரானா ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறினர்.  இந்த விவகாரம் சர்ச்சையானது.  அவர்களுக்கு சிவசேனாவினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

எனினும் முதல்-மந்திரி வீட்டின் முன் பஜனை பாடுவதில் உறுதியாக இருப்பதாக ரவி ரானா கூறினார்.  இதனையடுத்து, உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக மாதோஸ்ரீ வீட்டின் அருகில் சிவசேனாவினர் அதிகளவில் திரண்டனர். 

ரவி மற்றும் நவ்னீத் ரானாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், அவர்கள் இருவரும் மாதோஸ்ரீ அருகில் வந்தால் தக்க பாடம் புகட்டப்படும் என்றனர்.

இந்த நிலையில் வீட்டை விட்டு இரவில் வெளியே வந்த உத்தவ் தாக்கரே, மாதோஸ்ரீக்கு வரும் தைரியம் யாருக்கும் கிடையாது என கூறி தொண்டர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கேட்டு கொண்டார்.

இதேபோன்று, மும்பையில் உள்ள நவ்னீத் மற்றும் ரவி ரானா வீட்டின் முன் கும்பல் ஒன்று கொடிகளை ஆட்டியபடி கோஷங்களை எழுப்பியபடி இருந்தன என்று அந்த தம்பதி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.  முதல்-மந்திரி வீட்டுக்கு செல்லாமல் தடுக்கும் நோக்குடன் அவர்கள் செயல்பட்டனர் என்றும் அவர்கள் கூறினர்.

தொடர்ந்து இந்த விவகாரம் சூடு பிடித்த நிலையில், ரவி-நவ்னீத் தம்பதி நேற்று கூறும்போது, எங்களுடைய வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிவசேனா தொண்டர்கள் மட்டுமல்ல.  அவர்கள், மராட்டிய முதல்-மந்திரியின் குண்டர்கள்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு மட்டுமே மக்களுக்கு எதிராக எப்படி குற்றச்சாட்டு வழக்குகளை பதிவு செய்ய முடியும் என்றும் அவர்களை சிறையில் தள்ள முடியும் என்றும் தெரியும்.  மராட்டியத்தில் மேற்கு வங்காளம் போன்ற சூழலை அவர் உருவாக்கி வருகிறார் என்று நவ்னீத் குற்றச்சாட்டாக கூறினார்.

இந்த சூழலில், நவ்னீத் மற்றும் ரவி ரானா இருவர் மீதும் மக்களை தூண்டி விடும் வகையில் பேசியதற்காக, அவர்கள் மீது பாம்பே போலீஸ் சட்டத்தின்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, அவர்களுடைய வீட்டில் இருந்து இருவரும் கைது செய்யப்பட்டு கார் நகர காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இந்த நிலையில், ஞாயிற்று கிழமையான இன்று, பாந்திராவில் உள்ள விடுமுறை மற்றும் ஞாயிற்று கிழமைக்கான பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு அவர்கள் இருவரும் கொண்டு செல்லப்பட்டனர். 

அவர்களின் வழக்கறிஞர் ரிஸ்வான் மெர்ச்சன்ட் என்பவரும் கோர்ட்டுக்கு சென்றுள்ளார்.  அவர்கள் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.  இதனை தொடர்ந்து, வழக்கறிஞர் ரிஸ்வான் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீது வருகிற 29ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.  இந்த மனுவுக்கு வருகிற 27ந்தேதி போலீசார் பதில் மனு தாக்கல் செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்