மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் ஜம்மு காஷ்மீர் - பிரதமர் மோடி
கடந்த 3 வருடங்களில் ஜம்மு காஷ்மீர் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
ஜம்மு,
காஷ்மீரில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:-
இன்றைய திட்டத்தின் மூலம் காஷ்மீர் வளர்ச்சி பெறும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த பாலி கிராம பஞ்சாயத்து கார்பன் இல்லாத பஞ்சாயத்தாக நாட்டிலேயே விளங்குகிறது. இந்த நாட்டிற்கே காஷ்மீர் முன் மாதிரியாக திகழ துவங்கி உள்ளது. புதிய சட்டங்கள் மூலம் அனைவருக்கும் அதிகாரம் என்ற நிலையை உருவாக்கி உள்ளேன். ஏழைகள், பெண்கள், தலித்துகள் பயன் பெற்றுள்ளனர். அம்பேத்கரின் கனவுகள் நிறைவேற்றப்படுகின்றன.
அனைத்து நிர்வாகத்திலும் பெண்கள் இடம்பெற வேண்டும் . பஞ்சாயத்துகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவோம். பஞ்சாயத்துகளே நாட்டின் முதுகெலும்பு. கடந்த 70 ஆண்டுகளில் காஷ்மீரில் தனியாரின் 17 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் 32 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு பஞ்சாயத்து ராஜ் தினம் ஜம்மு காஷ்மீரில் கொண்டாடப்படுவது ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் அடிமட்டத்தை எட்டியதும், இங்கிருந்து உங்கள் அனைவருடனும் உரையாடுகிறேன் என்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும்.
ஜம்மு காஷ்மீரில் அனைத்து மட்டத்திலும் ஜனநாயகம் சென்றடைந்தது பெருமைக்குறிய விஷயம். இங்கு முதலீடு செய்ய ஏராளமான முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். ஜனநாயகத்திற்கும், வளர்ச்சிக்கும் ஜம்மு காஷ்மீர் தற்போது முன்னுதாரணமாக திகழ்கிறது. கடந்த 2, 3 வருடங்களில் ஜம்மு காஷ்மீர் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.