திருப்பதியில் 3 இடங்களில் ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் வழங்க ஏற்பாடு - தேவஸ்தான அதிகாரி தகவல்
திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன பக்தர்களுக்கு ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. திருப்பதியில் உள்ள சீனிவாசம் விடுதி, அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜசாமி சத்திரம் ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்ட்டர்கள் மூடப்பட்டன.
அதைத்தொடர்ந்து அனைத்துப் பக்தர்களும் இலவச தரிசனத்தில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி திருப்பதியில் மேற்கண்ட 3 இடங்களில் உள்ள கவுண்ட்டர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்தக் கவுண்ட்டர்களில் இலவச தரிசன பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட் டோக்கன்கள்’ வழங்குவதற்காக ஆலோசனை நடத்தினார்.
அப்போது தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ேக.எஸ்.ஜவகர்ரெட்டி கூறுகையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். 3 இடங்களில் பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் டோக்கன்கள் விரைவாக வழங்கி, சாமி தரிசனத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்றார்.